கொரோனாவை தடுக்க சீனாவிலிருந்து வட கொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுக்கொல்ல கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
பெரும் தொற்றான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளதால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸ் வட கொரியாவில் பரவவில்லை என்றே வட கொரியா தரப்பிலிருந்து சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தென் கோரியா மற்றும் சீனாவிலிருந்து அத்துமீறி நுழைபவர்களை சுட்டுக்கொல்லும்படி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அத்துமீறி நுழைபவர்கள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க கிம் ஜாங் உன் கூறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள தென் கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி ராபர்ட் அம்ரம்ஸ் ”கொரோனா பரவலை தொடர்த்து ஜனவரி மாதமே தென் கொரியாவுடனான எல்லையை வட கொரியா மூடியது. ஜூலை மாதம் அவசர நிலை அறிவிக்கப்பட்ட நிலையில், சீனா, தென் கொரியாவிலிருந்து உள் நுழைபவர்களை சுடவும் உத்தரவிட்டுள்ளது” என கூறியுள்ளார்.
ஆனால் இதுகுறித்து வட கொரிய ஊடகங்களோ, அரசோ எந்த செய்தியும் வெளியிடாத நிலையில் வட கொரியாவில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத சூழல் உருவாகியுள்ளது.