வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும், ஜனநாயக உரிமைகளுக்காக போராடி வரும் மரியா கொரினா மச்சாடோவு என்பவருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசு அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், இந்தப் பரிசை வெல்ல ஆர்வத்துடன் இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி நோபல் குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெனிசுலாவில் ஜனநாயக உரிமைகளை ஊக்குவிப்பதற்காக தளராது உழைக்கும் மச்சாடோ, 'வெனிசுலாவின் இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப்படுகிறார். அவரது இந்த பணிகள், டைம் பத்திரிகையின் '2025 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர்' பட்டியலில் அவரது பெயரை இடம்பெற செய்தது.
பரிசு குறித்த அறிவிப்பை வெளியிட்ட நோபல் குழு, மரியா கொரினா மச்சாடோவுக்கு வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட "தளராத பணிக்காகவும்" மற்றும் "சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகம் நோக்கி ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தைக்" கொண்டு வருவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் இந்தப் பரிசை வழங்குவதாகக் கூறியுள்ளது.