ஏமனில் கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த நிமிஷா என்பவருக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிமிஷாவை காப்பாற்ற கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மதகுரு அபூபக்கர் என்பவர் முயற்சி எடுத்து வருவதால் இந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் கொலை செய்யப்பட்ட மஹதியின் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், அதேபோல் ஏமன் மத குருமார்களிடம் நிமிஷா குடும்பத்தினர் தரும் இழப்பீட்டை ஏற்றுக்கொள்ளுமாறும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, இப்போதைக்கு மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் உடன்பாடு ஏற்பட்டால் அவரது மரண தண்டனை ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏமன் நாட்டு சட்ட விதிகளின்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீட்டை ஏற்றுக்கொண்டால் மரண தண்டனை ரத்து செய்ய முடியும். இதுவரை நிமிஷா குடும்பத்தினர் 8.6 கோடி ரூபாய் இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.