சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நைஜீரியாவின் தேவாலயத்தில் கொடூரமான துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
சமீபகாலமாக உலகளவில் நடந்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்கள் முன்னதாக பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பல குழந்தைகள் பலியான சம்பவம் துப்பாக்கி கலாச்சாரம் மீதான பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது நைஜீரியாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நைஜீரியாவின் ஓண்டோ மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தேவாலயத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மக்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். மேலும் கையெறி குண்டுகளையும் வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் 22 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் பலர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.