லண்டனில் கைதாகியுள்ள நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க அவரது வளர்ப்பு நாயைக் காரணம் காட்டி வாதாடியுள்ளார் அவரது வழக்கறிஞர்.
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர்.
நீரவ் மோடி தப்பிச் சென்ற பிறகு போலீசுக்கு மோசடி விவகாரம் தெரிய வந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை நிரவ் மோடியை தேடி ஆரம்பித்தது. நீரவ் மோடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, முரட்டு மீசையை வளர்த்துக் கொண்டு லண்டனில் வைர வியாபாரம் செய்து வருகிறார். இந்த செய்தியை பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் வெளியிட்டு உள்ளது.லண்டனில் நிரவ் மோடி, புதிதாக வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதுடன், தாம் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே அலுவலகமும் வைத்துள்ளதாகவும் டெய்லி டெலிகிராஃப் தெரிவித்துள்ளது. நிரவ் மோடி வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் வாடகை மாதத்திற்கு 16 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என டெய்லி டெலிகிராஃப் கூறியுள்ளது. பின்னர் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கேட்டார். ஆனால் அவருக்கு மார்ச் 29 வரை ஜாமீன் வழங்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மார்ச் 29 ஆம் தேதி நடந்த இந்த வழக்கின் விசாரணையில் மீண்டும் ஜாமீன் கேட்டார் நீரவ் மோடியின் வழக்கறிஞர். அப்போது ‘நீரவ் மோடிக்கு வயதான பெற்றோர் இருப்பதாகவும் அவரது வீட்டில் அவருக்குப் பிரியமான வளர்ப்பு நாய் உள்ளதாகவும் அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும்’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.