இஸ்ரேல் வடக்கு பகுதிகளின் மீது லெபனானின் ஹிஸ்புல்லா படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இஸ்ரேல் தெற்கு எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தும் நிலையில், வடக்கு எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹிஸ்புல்லா படைகள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது
பாலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக போராட்டத்தில் பங்கு பெறுவதாக ஹிஸ்புல்லா அறிவிப்பு செய்துள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டின் வடக்கு, தெற்கு என இரு பகுதியிலும் தாக்குதல் நடத்தப்படுவதால் இஸ்ரேல் இக்கட்டான நிலையில் உள்ளது.
லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்களை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு பதிலடி தருவதற்காக லெபனான் எல்லையில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஹமாஸ் இயக்கம் ஒருபக்கம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சரியான நேரத்தில் ஹிஸ்புல்லா இயக்கம் கைகோர்த்துள்ளதால் நிலைமையை இஸ்ரேல் சமாளிக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.