இஸ்ரேல் மீது திடீரென ஹமாஸ் தாக்குதல் நடத்தும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் உயிர் பலி ஏற்பட்டுள்ளதாகவும் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருவதாகவும்
தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இரு நாடுகளின் எல்லையில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் நாடு கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டிற்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் பிரதமர் தனது சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். எங்கள் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்த நண்பர் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி என்றும் இஸ்ரேல் மக்கள் உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.