ஈழப்போரில் காணாமல் போன ஆயிரக்கணக்கான மக்களும் இறந்துவிட்டதாக இலங்கை அதிபர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டனர். யுத்தத்தின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு சென்றனர். மேலும் பலர் என்ன ஆனார்கள் என்பது தெரியாததால் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டார்கள்.
போர் முடிந்து இத்தனை வருடங்கள் கழித்து ஐநாவின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் ஹானா சிங்காரிடம் காணாமல் போனவர்கள் குறித்து பேசியுள்ளார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே. அப்போது அவர் 30 ஆண்டுகால போரில் காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இலங்கை அரசின் புள்ளிவிவரப்படி காணாமல் போனவர்கள் 20 ஆயிரம் பேர் என கூறப்படுகிறது. கணக்கில் இல்லாமல் இதை விட அதிகமானவர்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது.