கனடாவில், காலிஸ்தான் அமைப்பின் தலைவர் இந்தர்ஜீத் சிங் கோசல் என்பவரை, , கனடா காவல்துறை கைது செய்துள்ளது. இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் நிலையில், இந்த கைது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்தில், இந்தர்ஜீத் சிங் கோசல் செப்டம்பர் 19-ஆம் தேதி, பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்திய பல குற்றங்களுக்காகக்கைது செய்யப்பட்டார். கோசலுடன் குற்றம் சாட்டப்பட்ட டொரண்டோவை சேர்ந்த அர்மான் சிங் மற்றும் ஜக்தீப் சிங் ஆகியோரும் ஒஷாவா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, இந்தர்ஜீத் சிங் கோசல் அந்த அமைப்பின் பொறுப்பை ஏற்றதாக கூறப்படுகிறது. அவர், காலிஸ்தானுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு பிரசாரங்களை நடத்தி வந்திருக்கிறார்.
மேலும், அவர் இந்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட குர்பட்வாந்த் சிங் பன்னூன் தலைமையிலான “சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்” என்ற பிரிவினைவாத அமைப்பிலும் உறுப்பினராக இருக்கிறார்.
நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், முன்னாள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டியதால் இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய உறவுகள் மோசமடைந்துள்ளன. இந்த சூழலில், காலிஸ்தான் அமைப்பின் முக்கிய தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது, இரு நாடுகளின் உறவுகளில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.