கேரளாவை சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், அந்த தண்டனைக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா என்பவருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையை ஏற்க மறுத்து வரும் நிலையில், ஒரு மாதத்திற்குள் தண்டனை நிறைவேற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கேரளாவை சேர்ந்த நிமிஷா கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு நர்சிங் பணி செய்ய சென்றபோது, அங்கு தலால் என்பவருடன் சேர்ந்து சொந்தமாக கிளினிக் வைத்தார். இந்த கிளினிக் நடத்துவதில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், நிமிஷாவின் பாஸ்போர்ட்டை கொடுக்காமல் தலால் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், தலாலை கொலை செய்துவிட்டு ஏமனை விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது நிமிஷா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், கடந்த 2018 ஆம் ஆண்டு நிமிஷா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டால், மரண தண்டனை ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இந்திய தூதரகம் மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையை ஏற்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில், மரண தண்டனை நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.