கேரளாவில் உள்ள மருத்துவ நிறுவனங்கள் தமிழகத்தில் வந்து மருத்துவ கழிவுகளை கொட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரள ஐகோர்ட் கேரள மாநில அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கேரளாவில் இருந்து மூட்டை மூட்டையாக லாரிகளில் மருத்துவ கழிவுகள் வந்து கொட்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த வாரம் உடனடியாக மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதை அடுத்து, லாரிகளில் வந்து மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில், மருத்துவ கழிவுகள் அகற்றும் பணி நடந்து கொண்டிருக்கும் நிலையில், இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு இன்று விசாரணை நடத்தியது.
இன்றைய விசாரணையின் போது, கேரள ஐகோர்ட் நீதிபதிகள், "தமிழகத்தில் கேரள அரசு மருத்துவக் கழிவுகளை கொட்டியது ஏன்? மருத்துவ கழிவுகளை கையாள்வதில் கேரளா அரசு தோல்வி அடைந்துவிட்டதா?" என்று கேள்வி எழுப்பினர்.
மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காத கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட், "மருத்துவ கழிவுகளை உரிய முறையில் மேலாண்மை செய்வதில் மாநில அரசு தவறிவிட்டது" என்றும், இது தொடர்பாக உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேரள அரசுக்கு உத்தரவு பரப்பியுள்ளது.