ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை இஸ்ரேல் ராணுவம் கொன்ற நிலையில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஒரு ஆண்டு காலமாக போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் தப்பி சென்று ரஃபாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அங்கும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு லெபனான் எல்லையில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சி குழு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள கோலன் ஹைட்ஸ் என்ற பகுதியில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலியானார்கள்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் எல்லையில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷூகர் கொல்லப்பட்டார். இந்நிலையில் மீண்டும் பதிலடியில் இறங்கியுள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது பல ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 5 ராக்கெட்டுகள் மட்டுமே இஸ்ரேல் எல்லைக்குள் தாக்கியதாகவும், ஆனால் அதனால் உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.
அதேசமயம் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் தற்போது ஈரான் நாடு இஸ்ரேலுக்கு எதிரான போரில் இறங்குவதாக அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் லெபனான், ஈரான், காசா என பல பகுதிகளிலும் இஸ்ரேலின் போர் தொடர்வதால் மத்திய தரைக்கடலில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது.
Edit by Prasanth.K