இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து மீண்டும் மீண்டும் மீண்டும் பேசி வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தற்போது மீண்டும் ஒருமுறை தான் போரை நிறுத்தியதாக பேசியுள்ளார்.
பஹல்காமி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தி 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றதுடன், பாகிஸ்தானின் தாக்குதல்களையும் முறியடித்தது. இந்த இரு நாடுகள் இடையேயான போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில், இரு நாடுகளிடையே பேசி போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது.
அப்போது தொடங்கி ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நான்தான் போரை நிறுத்தினேன் என்று தொடர்ந்து பேசி வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதுகுறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தபோது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் இரு நாடுகள் இடையேயான ஹாட்லைனில் ப்ரைவசியாக பேசி முடிவு செய்யப்பட்டது என்றும், அமெரிக்கா உட்பட எந்த நாட்டின் அழுத்தமும் இதில் கிடையாது என்றும் கூறியிருந்தார்.
ஆனாலும் ட்ரம்ப் தனது போர்நிறுத்த புராணத்தை நிறுத்துவதாக இல்லை. நேற்று தென்னாப்பிரிக்க அதிபர் அமெரிக்க வெள்ளை மாளிகை வந்தபோது அவரை வரவேற்று தனது அருமை பெருமைகளை பேசிய ட்ரம்ப், இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று மீண்டும் பேசியுள்ளார்.
“இந்தியா பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் தீர்த்து வைத்தேன். மோதல் பெரிதான நிலையில் இரு நாடுகளையும் தொடர்புக் கொண்டு பேசி சண்டையை நிறுத்தினேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு பிறகு அது வேறு மாதிரி மாற்றி பேசப்பட்டது” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K