அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு அழைப்பின் பேரில் தற்போது கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவுக்கு விஜயம் செய்துள்ளார். இதனையடுத்து, இந்திய தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியும், அவரை நேரில் சந்திக்க அதே நகருக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மே 14ம் தேதி, தோஹாவில் உள்ள லுசைல் அரண்மனையில், கத்தார் அரசர் டிரம்புக்காக அரசு விருந்தொன்று நடத்துகிறார். இதில் முகேஷ் அம்பானியும் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்வார் என கூறப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. அதனால் அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பல நிறுவனங்கள், ரிலையன்ஸில் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. மேலும் வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்கிய அம்பானியின் நிறுவனம், டிரம்ப் ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட 25% வரிவிதிப்பால் இறக்குமதியை நிறுத்தியது.
மேலும், கூகுள், மெட்டா போன்ற அமெரிக்க டெக் நிறுவனங்கள், அம்பானியின் டிஜிட்டல் திட்டங்களில் பங்கு பெற்றுள்ளன.
டிரம்ப் குடும்பத்துடன் அம்பானி குடும்பம் நட்புறவை வைத்திருப்பது புதியது அல்ல. அவரது பதவியேற்பு விழாவிலும் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.