இந்தியா மீது 50 சதவீத வரி அமலில் உள்ள நிலையில் வரும் வாரங்களில் பிரதமர் மோடியுடன் பேச உள்ளதாக கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியா மீது 25 சதவீத வரி விதித்ததுடன், ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகத்தை காரணம் காட்டி மேலும் 25 சதவீதம் வரியை உயர்த்தி 50 சதவீதம் ஆக்கினார். ஆனால் இதற்கெல்லாம் பின் வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வணிகம் செய்து வரும் இந்தியா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளுடனான நட்புறவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவை பணிய வைக்க 100 சதவீதம் வரி விதிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வந்ததாக செய்திகள் வெளியானது.
முன்னதாக இந்தியாவை பகைத்துக் கொள்வது அமெரிக்காவிற்கு நல்லதல்ல என அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பலர் ட்ரம்பை எச்சரித்திருந்த நிலையில், தற்போது ட்ரம்ப் இந்தியாவுடன் சுமூகமாக செல்ல முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ட்ரம்ப் “இந்தியாவும் அமெரிக்காவும் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் வாரங்களில் எனது மிக நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளுக்கும் வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்!” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ட்ரம்ப் போன் செய்தபோது பிரதமர் மோடி பேச மறுத்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் ட்ரம்ப் நட்புறவோடு இந்தியாவை அணுக முயல்வதாக தெரிகிறது, இதனால் விரைவில் வரிவிதிப்பு பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என பலரும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.
Edit by Prasanth.K