நியூசிலாந்து நாட்டின் தொடர் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
நியூசிலாந்து நாட்டில் சமீபத்தில் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரது தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், ஆக்லாந்து என்ற மாநகரில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது.
இதனால், ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த நகரில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விமான நிலையத்திலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதனால் வெளி நாடு செல்லும் விமான பயணிகளும் பாதித்துள்ளனர். தற்போது மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
பருவகால மழையால் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியானதாகவும் ஒருவரை தேடும் பணி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.