வங்கதேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் ஹமீத் தற்போது தனது நாட்டை விட்டு புறப்பட்டு தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக 2024-ல் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், ஹசீனாவும், அவரது முக்கிய ஆதரவாளர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். ஹசீனா தற்போது இந்தியாவில் தங்கியுள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹசீனா கட்சியான அவாமி லீக்-இன் மூத்த உறுப்பினரான அப்துல் ஹமீத், 2013 முதல் 2023 வரை இரு முறை குடியரசுத் தலைவராக இருந்தவர். தற்போது அவர் நாட்டை விட்டு புறப்பட்டிருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஆட்சி அமைத்துள்ள இடைக்கால அரசு, கடந்த காலங்களில் நடந்த துப்பாக்கிச் சூடுகள், குறிப்பாக கிஷோர்கஞ்ச் பகுதியில் நடந்த தாக்குதல்களை விசாரித்து வருகிறது. இதன் தொடர்பாக அப்துல் ஹமீட், ஹசீனா, அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர்மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, தற்போது அவருக்கு பயணத் தடை விதிக்கப்படவில்லை என்பதால், வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.