பிரபல வங்கதேச நடிகை நேற்று இரவு தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவருடைய வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகை மேஹ்னா ஆலம் என்பவர் பல வங்க மொழி படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், அவர் வங்கதேசம் மற்றும் சவுதி அரேபியா இடையிலான இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டதாக கூறப்படும் காரணத்தால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நடிகை மேஹ்னாவை 30 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் பேரில், அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, நடிகை மேஹ்னா சவுதி அரேபியா தூதரகத்தில் பணியாற்ற வந்த அதிகாரி ஒருவரை காதலித்ததாகவும், ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியும் குழந்தைகளும் உள்ள அந்த அதிகாரியை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அந்த அதிகாரி திருமணம் செய்ய முடியாது எனத் தெரிவித்த பின்னரே, மேக்னா சவுதி அரேபியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனாலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.