அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னாள் கூட்டாளியும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க், அமெரிக்காவில் ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நாட்டின் இரு கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதால் புதிய கட்சி தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2024 தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு காரணமாக இருந்த எலான், அவருடைய உள்நாட்டு செலவு திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். இந்தத் திட்டம் அமெரிக்காவின் கடனை மேலும் அதிகரிக்கும் என்று கூறி, இந்த மசோதாவுக்கு வாக்களித்த சட்டமியற்றுபவர்களை தோற்கடிக்கத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக அவர் சபதம் செய்தார்.
இந்த நிலையில் தற்போது 'அமெரிக்கா கட்சி' என்று அழைக்கப்படும் தனது சொந்த அரசியல் அமைப்பை எலான் மஸ்க் உருவாக்கி உள்ளார்.
ஊழலால் நம் நாட்டை திவாலாக்கும் நிலைமையில் நாம் வாழ்கிறோம், ஜனநாயகம் இல்லை, என்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள எலான், "இன்று, உங்கள் சுதந்திரத்தை உங்களுக்கு திரும்பக் கொடுக்க 'அமெரிக்கா கட்சி' உருவாக்கப்பட்டுள்ளது," என்றும் அறிவித்துள்ளார்.