அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க நிறுவனங்கள் இனி இந்தியாவிலிருந்து ஆட்களை எடுக்க வேண்டாம் என்றும், அமெரிக்காவிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வது குறித்தும், இந்தியாவிலிருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி வருவது குறித்தும் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். "இது அமெரிக்காவின் சுதந்திரத்தைச் சீர்குலைத்துள்ளது," என்று அவர் குறிப்பிட்டார். மேலும், அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்த சம்பவங்களும் நடந்ததாக கூறிய அவர், "இனி எனது ஆட்சியில் அதெல்லாம் முடிவுக்கு வந்துவிடும். அமெரிக்காவின் நலனுக்காக சில அணுகுமுறைகளை மாற்ற வேண்டியது உள்ளது" என்று எச்சரித்தார்.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இனி வெளிநாடுகளில் அதிகம் முதலீடு செய்ய வேண்டாம் என்றும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக நபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு பதிலாக, உள்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும், அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தொழில்நுட்ப நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
டிரம்ப்பின் இந்த வெளிப்படையான பேச்சு, அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தை மற்றும் குடியேற்ற கொள்கைகள் குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது. இது இந்திய ஐடி துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.