தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வருக்கு ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்னை தொடர்பாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.
இதய சிகிச்சை டாக்டர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது.
இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.