தைவானுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்தால் அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என சீனா எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனா – தைவான் இடையே எல்லை பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் தைவானுக்கு அமெரிக்கா உதவுவதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனா – தைவான் இடையே எல்லை ஆக்கிரமிப்பு பிரச்சினை தொடர்பாக சீனா தனது எல்லையில் ஆயுதங்களை நிறுத்தி தைவானை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தைவானுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை தைவான் ஜலசந்தியில் கொண்டு செல்வது, உளவு விமானங்களை சீன எல்லையில் பறக்க விடுவதோடு மட்டுமல்லாமல், தைவானோடு ஏற்படுத்தியுள்ள ராணுவ ஒப்பந்தத்தின்படி ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. சமீபத்தில் வான்வழி தாக்குதல் ஏவுகணைகளை அமெரிக்காவிடம் வாங்க தைவான் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில் தைவானுக்கு ஆயுதங்கள் விற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானுடன் ஆயுத வியாபாரத்தில் ஈடுபடும் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து சீனா ஆயுதங்கள் வாங்க போவதில்லை என்றும், அந்நிறுவனங்களுக்கு சீனாவில் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.