ரஷ்யாவில் உளவு வேலை பார்த்ததாக, பிரிட்டன் தூதர அதிகாரிகள் இரண்டு பேர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு சேவை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரிட்டன் தூதர அதிகாரிகள் இருவரும் பொய்யான தகவல்களை அளித்து தங்கள் நாட்டுக்குள் நுழைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது தெரியவந்துள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இருவரையும் ரஷ்யாவில் இருந்து வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் பிரிட்டன் தூதரகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரிட்டன் செயல்பட்டு வருவதால் ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக பார்க்கப்படுகிறது என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.