ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை சீனா தோண்டி முடித்துள்ளது. இந்த கிணற்றை தோண்டும் பணிக்குப் பல வருடங்கள் ஆன நிலையில், இதன் ஆழம் எத்தனை அடி என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை தோண்டும் பணியில் கடந்த பல மாதங்களாக சீனா ஈடுபட்டு வந்தது. தற்போது 580 நாட்களில் இந்த கிணற்றை தோண்டும் பணி முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு மட்டும் 300 நாட்கள் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சின்ஜியாங் உய்குர் பகுதியில், பாலைவனத்தின் மையப்பகுதியில், இந்த கிணறு அமைந்துள்ளது. பூமியின் பரிணாமம் மற்றும் புவியியல் சார்ந்த ஆராய்ச்சிக்காக இந்த கிணற்றை தோண்டும் பணியை சீனாவின் தேசிய பெட்ரோலிய கழகம் கடந்த 2023ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி தொடங்கியது.
580 நாட்கள் நீடித்த இந்த பணி தற்போது நிறைவு பெற்றதாக சீன அரசு அறிவித்துள்ளது. 12,000 அடி வரை துளையிடும் கருவி பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த கிணறு 10,910 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது உலகின் இரண்டாவது ஆழமான கிணறு என்றும், ஆசியாவின் மிக ஆழமான கிணறு என்றும் கூறப்படுகிறது. ரஷ்யாவில் உள்ள எஸ்டி-3 என்ற கிணறுதான் உலகிலேயே மிகவும் ஆழமானதாகும். அதன் ஆழம் 12,262 மீட்டர் என்றும் குறிப்பிடப்படுகிறது.