பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்திருப்பதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரிட்டனுக்கு பயணம் செய்துள்ளார். நேற்று, லண்டனில் பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்தார். பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சரின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது.
இந்த நிலையில், பிரிட்டனுக்கு வந்திருந்த ஜெய்சங்கருக்கு எதிராக காலிஸ்தான் ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஜெய்சங்கர் காரில் ஏறுவதற்காக வெளியே வந்தபோது, பாதுகாப்பு காவலர்களை மீறி, சாலையின் மத்தியில் வந்த ஆதரவாளர் ஒருவர் ஜெய்சங்கரை தாக்க முயன்றதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், காலிஸ்தான் ஆதரவாளர் தனது கையில் வைத்திருந்த இந்திய தேசியக் கொடியை கிழித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அங்கு சில நிமிடங்கள் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
ஆனால், அதே நேரத்தில் அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க வந்த காலிஸ்தான் ஆதரவாளர்களை பிரிட்டன் போலீஸ் கைது செய்யாமல், எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்பிவிட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.