வெள்ளை நிற திமிங்கலம் ஒன்று விளையாடுவதற்காக படகில் சென்றவர்களை துரத்தி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
திமிங்கல இனங்களிலேயே தூய வெள்ளை நிறம் கொண்டது பெலுகா திமிங்கலம். பனிக்கடல் பகுதிகளில் வாழும் இந்த திமிங்கலங்கள் வெகு அரிதாகவே மனிதர்கள் கண்களில் தென்படும். இவை மிகவும் ஆழமான கடல் பகுதிகளில் வாழக்கூடியவை.
தற்போது பெலுகா திமிங்கல குட்டி ஒன்றுடன் படகில் செல்லும் சிலர் பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் சிலர் படகில் பனிக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பெலுகா திமிங்கலம் தென்பட்டுள்ளது. இவர்கள் ஒரு பிளாஸ்டிக் பந்தை தூக்கி கடலில் வீச, வேகமாக நீந்தி சென்ற திமிங்கலம் அதை எடுத்து வந்து அவர்களிடமே திரும்ப தருகிறது. தொடர்ந்து எத்தனை முறை பந்தை தூக்கி வீசினாலும் அதை கொண்டு வந்து கொடுத்து கொண்டே இருந்துள்ளது அந்த திமிங்கலம்.
இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் இதற்கு கருத்துகளை பலர் பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் “அந்த திமிங்கலம் பந்தை எடுத்து வந்து விளையாடவில்லை. நீங்கள் கடலில் தூக்கி போடும் குப்பையை எடுத்து வந்து உங்களிடம் கொடுக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோவை பதிவிட்டவருமே இதுபோன்ற கடல் ஜீவன்கள் தொடர்ந்து உயிர்வாழ பிளாஸ்டிக் பயன்பாடுகளை தவிர்க்க வேண்டுமெனெ குறிப்பிட்டுள்ளார்.