பலூசிஸ்தானை சேர்ந்த பலூச் விடுதலைப் படை (BLA) நடத்திய தாக்குதலில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் பாகிஸ்தான் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இராணுவ வாகனம் முழுமையாக அழிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தாக்கப்பட்ட வாகனத்தில் பயணம் செய்த சிறப்பு தளபதி தாரிக் இம்ரான் மற்றும் சுபேதார் உமர் பாரூக் உள்ளிட்ட அனைவரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் கச்சி மாவட்டத்தில் உள்ள மச் பகுதியில் நடந்ததாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த வாகனத்தின் மேல் திடீரென வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உள்ள 12 வீரர்கள் உடனடியாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் செய்தி நிறுவனத்தின் தகவலின் படி, தாக்குதலில் வாகனம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, அந்த பகுதியில் பதுங்கிய பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம், பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் பலூசிஸ்தானில் நடைபெற்ற இரு சம்பவங்களில் 10 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக BLA இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.