பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை பலுசிஸ்தான் விடுதலை படை அமைப்பு கடத்திய நிலையில், அதை எப்படி செய்தார்கள் என்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக உள்ள பலுசிஸ்தானை தனிநாடாக அறிவிக்கக் கோரி பலுசிஸ்தான் விடுதலை படை என்ற அமைப்பு பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது. பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள பலுசிஸ்தான் விடுதலை படையினர் பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலை கடத்தி, பயணிகளை சிறை பிடித்தது.
பெண்கள், குழந்தைகளை மட்டும் விடுவித்துவிட்டு மீதமிருந்த 214 ஆண் பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்துக் கொண்ட அவர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் என பேரம் வைத்தனர். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி 27 கிளர்ச்சியாளர்களை கொன்று பயணிகளை மீட்டது.
இந்நிலையில் பலுசிஸ்தான் விடுதலை படையினர், ரயிலை கடத்தியது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். 8வது சுரங்கபாதை அருகே குண்டை வெடிக்க செய்து ரயிலில் அவர்கள் ஏறுவதும், பயணிகளை சிறை பிடிப்பதும் உள்ளிட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K