அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார்.
அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.
கஜமுகாசுரன் என்ற அசுரன் மகாதர் என்ற முனிவருக்கும் விபுதை என்ற அசுரப் பெண்ணக்கும் மகனாக பிறந்து மாதங்கபுரத்தை ஆட்சி புரிந்து வந்தான். இவன் சிவபிரானை நோக்கிப் பெருந்தவம் புரிந்து, எந்த ஒரு ஆயுதத்தினாலும் அழியாவரமும் பெற்றான். தான் பெற்றவரத்தினால் செருக்கடைந்து இந்திரனாதி தேவர்களைத் துன்புறுத்தினான். இவனுடைய கட்டளையை ஏற்றுச் செய்வதில் சலிப்படைந்த தேவர்கள் சிவபிரானிடம் முறையிட்டனர்.
சிவபிரான் ஆணைப்படி விநாயகப்பெருமான் கஜமுகனுடன் பெரும் போர் புரிந்தார். விண்ணும் மண்ணும் அதிர்ந்தன. இறுதியில் விநாயகர் தமது வலக்கொம்பை (வலது தந்தம்) முறித்து சிவமந்திரத்தை கூறி ஏவினார். அந்த ஞானமேயாய தந்தம் கஜமுகாசுரனைப் பிளந்தது. மாயா வரம் பெற்ற அவன் மீது கருணை மழை பொழிந்தார் அவனுடைய அறியாமை அகன்றது மெய்யுணர்வு பெற்றான் விநாயகரைப் பணிந்து வணங்கினான். வந்த மூஷிகத்தை வாகனமாக்கிக் கொண்டார்.
விநாயகர் வானவர்கள் மலர் மழை பொழிந்தார்கள். ஆனை முகத்தண்ணலே! நாங்கள் இத்தனை காலமும் கஜமுகாசுரனுக்கு காலை, நண்பகல், மாலை நேரங்களில் ஆயிரத்தெட்டு தோப்புக்கரணம் போட்டோம். இனி தங்கள் முன் அதனைச் செய்ய அருள் புரிக என்று வேண்டிக் கொண்டானர் விநாயகர் புன்முறுவலோடு மூன்று முறை தோப்புக்கரணம் போட்டால் போதும் என்று கூறி அருள் புரிந்தருளினார்.
அன்று முதல் இன்றுவரை தேவர்களும் அடியவர்களும் மூன்றுமுறை அப்பொருமான் முன் தோப்புக்கரணம் இடுவதனால் அறிவு வளர்ச்சியும் உடல் நலனும் உண்டாகும் விநாயகரின் பெருங்கருணைக்கும் உரியவராகின்றார்.
கஜமுகாசுரனை விநாயகர் வெற்றி பெற்றதினால் மனமகிழ்ந்த சிவபெருமான் கணங்களுக்கெல்லாம் தலைவராக்கி கணபதி கணேசர் கணாதிபன் கணநாதன் என வாழ்த்தி வரமும் கொடுத்தார்.