அருள்நிதி நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் 'டிமான்டி காலனி 3' படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பும் தொடங்கியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்கு அருள்நிதியும், படத்தை இயக்குவதற்கு அஜய் ஞானமுத்துவும் அதிக சம்பளம் கேட்டதால், படத்தின் பட்ஜெட் 60 கோடி ரூபாய் வரை உயர்ந்ததாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி பரவியது.
ஆனால், உண்மையில் இருவருமே சம்பளத்தை உயர்த்தி கேட்கவில்லை என்றும், 'டிமான்டி காலனி 2' படத்திற்கு என்ன சம்பளம் வாங்கினார்களோ, அதே சம்பளத்தைத்தான் மூன்றாம் பாகத்திற்கும் வாங்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. சம்பளத்தை உயர்த்தி கேட்டதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் வதந்தி என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
'டிமான்டி காலனி 2' சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் மூன்றாம் பாகத்தின் பட்ஜெட் 30 முதல் 35 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. பட்ஜெட் 10 முதல் 15 கோடி ரூபாய் அதிகரிப்பதற்கு ஒரே காரணம், வெளிநாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டிமான்டி காலனி 2' படம் 85 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அதைவிட அதிகமாக மூன்றாம் பாகம் வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.