தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தைய சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய கூலி படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு பில்டப் கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் படம் வெளியான முதல் காட்சியில் இருந்தேக் கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. புதிதாக எதுவும் இல்லாமல் மசாலா படங்களுக்கே உரிய அதே டெம்ப்ளேட் திரைக்கதை, கதாநாயக வழிபாடு என அரைத்த மாவையே லோகேஷ் அரைத்துள்ளார் என ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
ரசிகர்களின் விமர்சனம் மட்டுமின்றி தற்போது திரைத்துறையில் உள்ளவர்களே விமர்சிக்க தொடங்கியுள்ளது. எழுத்தாளரும் கேவி ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகியோரின் படங்களில் கதாசிரியராகப் பணியாற்றியவருமான சுபா(சுரேஷ்) கூலி படத்தை விமர்சித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “இந்தப் படத்துக்கு செலவு செய்ததை வைத்து குறைந்தது 30 நல்ல மீடியம் பட்ஜெட் படங்கள் எடுத்திருக்கலாம் என்ற ஆதங்கத்தைத் தவிர்க்க முடியவில்லை. புயலில் சிக்கிய கட்டுமரம் போல கதை எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டு எங்கேயோ கரை ஒதுங்கி.. அதே துறையில் இருந்துகொண்டு விமர்சனம் செய்யக்கூடாது என்ற சுயக்கட்டுப்பாட்டை மீறி விரல்கள் டைப் அடிக்கின்றன. மன்னிக்கவும்!” எனக் கூறியுள்ளார்.