Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏன் இயக்குனர்கள் சுமார் படங்களையும் பார்க்கவேண்டும்?… தக் லைஃப் தோல்வி சொல்லும் பாடம்!

Advertiesment
தக் லைஃப் திரை விமர்சனம்

vinoth

, வெள்ளி, 13 ஜூன் 2025 (13:15 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸாகி மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் இன்னும் 100 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கான கதை கமல்ஹாசன் கொடுத்தது, திரைக்கதை எழுதி இயக்கியது மணிரத்னம் என்றால் நம்ப முடியவில்லை என்பதுதான் பல ரசிகர்களின் புலம்பல். இந்த படத்தில் அதிகம் ட்ரோல் ஆகிக் கொண்டிருப்பது படத்தின் இடைவேளைக் காட்சிதான். நேபாளத்தில் நடக்கும் அந்த காட்சியில் கமல்ஹாசனை அவரின் கூட இருந்தவர்களே முதுகில் குத்தி (?) மலையில் இருந்து தள்ளிவிட அவர் அங்கிருந்து விழுந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை எனும் நிலையில் இருந்து தப்பித்து வந்து தன் எதிரிகளை (துரோகிகளை) பழிவாங்குவதே இரண்டாம் பாதி.

இது எங்கேயேக் கேட்டது போலவே இருக்கிறதல்லவா. ஆமாம் அஜித் நடித்த அசல் மற்றும் விவேகம் படத்தின் இடைவேளைக் காட்சிகளும் கிட்டத்தட்ட இதேதான். அஜித் படத்தில் யாராவது அவரை முதுகில் குத்துவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் விவேகம் படத்தில் அவர் பனி மலைகளுக்கு இடையே தப்பித்து சர்வைவ் ஆகும் காட்சிகள் படம் வெளியான போது கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டன. அதே போலதான் அசல் படத்திலும் அஜித் சுடப்பட்டு தப்பித்து வந்து தன் துரோகிகளைக் கொல்வது (அதிலும் அண்ணன்கள், நெருங்கிய உறவினர்கள்தான்). அந்த இரு படங்களுமே ரசிகர்களால் நிராகரிக்கப்பட்ட சுமாரான படங்கள்தான்.

அந்த படத்தைக் கமல்ஹாசனோ, மணிரத்னமோ பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இருவரும் தமிழ்ப் படங்களே அதிகமாகப் பார்க்காத உலக சினிமா ரசிகர்கள். அப்படி ஒருவேளை மணிரத்னம் & கமல் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் இந்த படங்களைப் பார்த்திருந்தால் கண்டிப்பாக அந்த காட்சிகளை மாற்றி எடுத்திருக்கலாம். படம் வேறு மாதிரியான விமர்சனங்களைக் கூட பெற்றிருக்கலாம். இதிலிருந்து நாம் என்னக் கற்றுக் கொள்ளலாம்? நல்ல  படங்களைப் போலவே சுமார்(!) படங்களையும் இயக்குனர்கள் பார்க்க வேண்டும். நல்ல படங்களை அதுபோல எடுப்பதற்கும்.. சுமார் படங்களை அதை விட சுமாராக நாம் எடுக்காமல் இருப்பதற்கும்… 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குழந்தைக் கடத்தல்… அதன் பின்னர் நிகழும் அதிர்ச்சி சம்பவங்கள்… ஓடிடி ஹிட் ‘ஸ்டோலன்’ எப்படி இருக்கு?