நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை வெளியிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் தக் லைஃப். இந்த படம் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், கன்னடம் - தமிழ் உறவுக் குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சைக்குள்ளானது.
இதனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கன்னட அமைப்புகள் பல கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்யவும் தடை விதிக்க வேண்டுமென குரல்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் தக் லைஃப் படத்தை வெளியிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. அதன் தலைவர் நாராயண கவுடா “கமல் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்காமல் முரண்டு பிடிக்கிறார். அவர் இதே மனப்போக்கோடு தொடர்ந்தால், கர்நாடகாவில் ஒரு திரையரங்கிலும் அவர் படத்தை திரையிட வாய்ப்பளிக்க மாட்டோம்.
கமல்ஹாசன் மீது எங்களுக்கு மதிப்பு மரியாதை இருந்தது. ஆனால் தமிழர்களை கவர கன்னடத்தை தாழ்த்தி பேசியுள்ளார். எந்த திரையரங்கிலாவது கமல்ஹாசன் படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம். எங்கள் மீது வழக்குப்பதிவு செய்தாலும் கவலை இல்லை. மற்ற மொழிகளை பற்றி பேசும்போது குறைந்தபட்ச அறிவாவது இருக்க வேண்டும்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K