பாலிவுட் நடிகரான வில்லன் நடிகர் வித்யுத் ஜமால் தனது கட்டுக்கோப்பான உடலாலும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். மேலும் களரிபயட்டு எனும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் தேர்ச்சி பெற்றவராக இருந்து வருகிறார். தமிழில் இவர் பில்லா 2, துப்பாக்கி மற்றும் அஞ்சான் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிந்த நடிகராக உள்ளார்.
அதன் பின்னர் சில படங்களில் அவர் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்குப் பெரிய வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. இதையடுத்து தற்போது மீண்டும் அவர் வில்லன் வேடங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது வித்யுத் ஜமால் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ கேம் தொடரான ஸ்ட்ரீட் பைட்டர் திரைப்படமாக உள்ள நிலையில் அதில் புகழ்பெற்ற தல்சிம் கதாபாத்திரத்தில் வித்யுத் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.