இந்திய அளவில் திரைப்படங்களுக்கு மத்திய அரசால் அளிக்கப்படும் உயரிய விருதாக தேசிய விருதுகள் உள்ளன. முன்பெல்லாம் வணிக ரீதியாக இல்லாமல் கலை ரீதியாக உருவாக்கப்படும் படங்களுக்கு இந்த விருதுகள் அளிக்கப்பட்டன. அத்தகையப் படங்களை கௌரவிக்கும் விதமாக இந்த விருதுகள் இருந்தன. ஆனால் இப்போது அந்த விருதுகளிலும் வணிக ரீதியாக உருவாக்கப்படும் படங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.
இந்த ஆண்டு அயோத்தி, ஆடு ஜீவிதம் போன்ற படங்களுக்கு எந்த விருதுகளும் அளிக்கப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சிறந்த குணச்சித்திர நடிகைக்காக உள்ளொழுக்கு படத்துக்காக விருது பெற்றுள்ள ஊர்வசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது சம்மந்தமாகப் பேசியுள்ள அவர் “இது ஒன்றும் பென்ஷன் அல்ல. நீங்கள் கொடுப்பதை பெற்றுக்கொள்ள, நாங்கள் வேலை செய்கிறோம். அதற்கான அங்கீகாரம்தான் விருதுகள். உள்ளொழுக்கு படத்துக்கு ஏன் எனக்கு குணச்சித்திர நடிகை பிரிவில் விருது வழங்கப்படுகிறது. ஏன் சிறந்த நடிகர் பிரிவில் விருதளிக்கப்படவில்லை. தேசிய விருதைப் பெறுவது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை” எனக் கூறியுள்ளார்.