Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் இசையமைத்த முதல் ஹாரர் திரைப்படம் - P 2 - இருவர்- இசையமைப்பாளர் தேவா!!

Advertiesment
Music director deva

J.Durai

, திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (18:50 IST)
அறம் புரடக்சன்ஸ்  நிறுவனம் சார்பில், P. ராமலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் சிவம் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில், ஒரு அருமையான கமர்ஷியல் திரில்லர் ஹாரராக உருவாகியுள்ள திரைப்படம் “P 2 - இருவர்”.ஆகஸ்ட் 9 ம் தேதி  திரைக்கு வரவுள்ள இப்படத்தின்  இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா,  நடைபெற்றது. 
 
இந்நிகழ்வினில்
நடிகர் ராஜசிம்மன் பேசியதாவது….....
 
“P 2 - இருவர்”  தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்  அனுமதியுடன் உங்களிடம் சில விசயங்கள் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு பெரிய விசயம் சினிமாவில் நடைபெறுகிறது. ஒரு குறிப்பிட்ட தேதி சொல்லி, அதன் பிறகு பட ஷீட்டிங் கிடையாது எனச் சொல்லியுள்ளனர்.  அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், நடிகர்களின் அதிகப்படியான சம்பளம். 2 ரூபாய்க்கும் இட்லி இருக்கிறது, 100 ரூபாய்க்கும் இட்லி இருக்கிறது. எதைச் சாப்பிட வேண்டுமென, நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். யாரும் இவ்வளவு சம்பளம் என அடம்பிடிப்பதில்லை, நீங்கள் தான் பெரிய ஹீரோ எனப் போய் நிற்கிறீர்கள். இலவசமாக நடிக்க கூட இங்கு ஆள் இருக்கிறது. உங்களை யார் தடுப்பது. நீங்கள் செய்யும் தவறுக்கு யாரைக் குறை சொல்வது, நடிகர்கள் நடிக்க வருவதில்லை, எனச் சொல்கிறீர்கள், ஆனால் பணம் கேட்டால், பிரித்துப் பிரித்து கொடுத்து அலைய விடுக்கிறீர்கள். ஒரு படம் ஒத்துக்கொண்ட போது அந்த சம்பளத்தில்,  ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சைக்குப் பணம் தர, ஒப்புக்கொண்டேன் ஆனால் பணம் தராமல் இழுத்து அடித்தார்கள். அந்த தயாரிப்பாளர் கேவலமாக நடத்தினார்.  
 
இதே சென்னையில் பலருக்குச் சோறு போட்ட என்னை, இழுத்து அடித்து, அந்த இடத்தில் பப்ளிக் டாய்லெட் கட்டினார்கள். யாரும் இங்கு ஒழுக்கமில்லை, ஒரு நடிகரை நடிக்கக் கூடாது எனச் சொல்ல நீங்கள் யார். முதலில் உங்கள் வேலையைச் சரியாகச் செய்யுங்கள். இந்தப்படத்தில் இதுவரை இல்லாத வித்தியாசமான பாத்திரம் செய்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.  
 
நடிகை அஸ்மிதா பேசியதாவது….....
 
என் பாடல் பார்த்திருப்பீர்கள், மிக அருமையாக இருந்தது, எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன். பஞ்சாபி பலகாரம் பாடலை, நானும் ரசித்தேன். தேவா சாருடன் இரண்டாவது பாடல் செய்துள்ளேன், பெருமையாக உள்ளது. தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 
 
நாயகன் பகத் விக்ராந்த் பேசியதாவது….....
 
நான் கன்னட நடிகர்,  இது தமிழில் எனது முதல் படம், எனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் நன்றி. முழுப்படத்தையும் கனக்ட் செய்யும், ஒரு நல்ல கேரக்டர் செய்துள்ளேன். என் முதல் தமிழ் படத்திற்குத் தேவா சார் இசை என்பது எனக்குப் பெருமை. இப்படம் நன்றாக வர, இதில் உழைத்த கலைஞர்கள் தான் காரணம், இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
 
கவிஞர் சினேகன் பேசியதாவது…......
 
இந்தப்படம் இந்த இடத்திற்கு வரக்காரணம் தயாரிப்பாளர் ராமலிங்கம் தான், அவருக்கு நன்றி. சிவம் சாரின் தேடுதல் எனக்குத் தெரியும், பல தடைகளைத் தாண்டி தான், இப்படம் செய்துள்ளார். இதற்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளருக்கு நன்றி. இதில் பணியாற்றியுள்ள அனைவரும் எனக்கு நண்பர்கள் என்பது பெருமை. தேவா சாருடன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வேலை பார்த்துள்ளேன். ஒன்றாக அமர்ந்து பாடலை உருவாக்கும் கலாச்சாரம் போய்விட்டது. ஒன்றாகப் பலர் அமர்ந்து ஒரு பாடலை வரிவரியாக உருவாக்கும் மகிழ்ச்சி முடிந்து போய்விட்டது. இப்போது எல்லாமே வாட்ஸப் தான். இந்த சமயத்தில் மீண்டும் தேவா சாருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. சமூகத்தின் முடிச்சுகளை அவிழ்க்கும் பணியாகக் கலை இருந்தது, ஆனால் கலைக்குள் முடிச்சை அவிழ்க்கும் பணியாக இன்றைய நிலை இருப்பது சோகம். அதை எல்லோரும் இணைந்து சரி செய்ய வேண்டும். சண்டை கடந்து, நாம் அனைவரும் இணைந்து இதைச் சரி செய்வோம். நன்றி. 
 
இயக்குநர் பேரரசு பேசியதாவது…....
 
P 2 - இருவர் பாடல் டிரெய்லர் நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள். ராஜ சிம்மன், சம்பத் ராம் நன்றாக நடித்துள்ளனர். பாடல்கள் கேட்டேன் அதன் பின்னால் ஒரு கதை இருக்கிறது. அஸ்மிதாவை நேரில் பார்த்தால் தான் சினேகன் பாட்டெழுதுவேன் எனச் சொல்லியிருக்கிறார். இயக்குநரும் கூட்டிச் சென்றுள்ளார், அவரைப்பார்த்தவுடன் எழுதிய பாடல் தான் 'பஞ்சாபி பலகாரம்' பாடல். தேவா சார் அன்றும் சரி இன்றும் சரி அனைவரையும் மதிக்கிறார். ரஜினி படம் செய்யும் போதே, அடுத்த நாள் சின்ன படம் செய்தார், அவருக்கு எல்லோரும் ஒரே மாதிரி தான். ஒரு பெரிய தயாரிப்பாளரை எப்படி மதிக்கிறாரோ, அதே போல் தான்,  சின்ன தயாரிப்பாளருக்கும், எல்லோருக்கும் அதே மரியாதை தான். அஜித்தையும், விஜய்யையும் உருவாக்கியவர் அவர் தான். உங்களை வணங்குகிறேன். தயாரிப்பாளர் ஸ்ட்ரைக் என்பது சின்ன விசயமல்ல, ஒரு துறையில் முதலாளிகள் ஸ்ட்ரைக் என்றால், அந்த துறை எத்தனை பிரச்சனைகளில்  இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மிகப்பெரிய நிறுவனங்கள் இன்று படமெடுப்பதில்லையே ஏன்,  ஒரு படத்தை எடுக்கும் தயாரிப்பாளர் நன்றாக இருக்க வேண்டுமென நடிகன் நினைக்க வேண்டும், படத்தில் வேலை பார்க்கும் அனைவரும் அப்படி நினைத்தால் மட்டுமே, சினிமா தழைக்கும். எப்போதும் சங்கத்துப் பிரச்சனைகளை, பிரஸில் பேசாதீர்கள், அது நல்லதல்ல, இந்த பிரச்சனை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும். இந்தப்படம் பாடல், நடிப்பு என எல்லாம் நன்றாக உள்ளது. எல்லோருக்கும் வெற்றி கிடைக்கட்டும் நன்றி. 
 
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…....
 
ராஜசிம்மன் பேசும்போது ஒட்டுமொத்தமாகத் தயாரிப்பாளர் அனைவரையும் திட்டிவிட்டார். அது தவறு. அவருக்குத் தவறு செய்த தயாரிப்பாளரைக் கண்டிக்கிறேன். தயாரிப்பாளருக்கு எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது. திருட்டு விசிடி பற்றி ஒரு தம்பி சொன்னார். பர்மா பஜாரில் திருட்டு விசிடி பிரச்சனையில் ஐந்து நாள் ஜெயிலுக்கு போனேன் யார் ஆதரவு தந்தார்கள். ஸ்ட்ரைக் வரக்கூடாது தான், ஆனால் இங்கு இருக்கும் பிரச்சனையை யார் சரி செய்வது.  தயாரிப்பாளர் லாபம் வந்தால் திரும்பப் படம் தான் எடுப்பான், விஷால் தலைவராக இருந்த போது க்யூப் பிரச்சனையைச் சொல்லி 4 மாசம் ஸ்ட்ரைக் செய்தார், ஒரு பிரயோசனமும் இல்லை. இதில் பாதிக்கப்படுவது ஏழைத்தொழிலாளி தான். நடிகர்கள் தயாரிப்பாளரைப் படாதா பாடு படுத்துகிறார்கள், இதையும் பேச வேண்டும். இப்படத்தில் பாடல், நடனம் எல்லாம் நன்றாக உள்ளது. எல்லா கலைஞர்களும் நன்றாக உழைத்துள்ளனர். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். 
 
தயாரிப்பாளர் இராமலிங்கம் பேசியதாவது…...
 
இது என் முதல் படம், சின்ன வயதிலிருந்து நிறையப் படம் பார்ப்பேன். நட்பு மூலம் இந்த படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அனுபவம் இல்லையே என எல்லோரும் கேட்டார்கள், தேவா சார் வந்தது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. சினேகன் சார் வந்தது இன்னும் நம்பிக்கை வந்தது. இயக்குநர் சிவமும், கேமராமேன் வெற்றியும் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்தனர். படத்தைச் சிறப்பாக எடுத்துத் தந்தார்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 
 
இசையமைப்பாளர் தேவா பேசியதாவது…....
 
என்னை வாழ்த்திப்பேசிய அனைவருக்கும் நன்றி. இதுவரை எவ்வளவோ படங்களுக்கு இசையமைத்து விட்டேன் இதுவரை ஹரார் ஒரு ஹாரர் படத்திற்கு கூட நான் இசையமைக்கவில்லை. அந்த குறையை இந்த படம் போக்கியது. இந்த வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் ராமலிங்கத்திற்கு நன்றி. இயக்குநர் சிவம் படம் அற்புதமாக எடுத்துள்ளார். நான் இசையமைக்க பத்து நாள் ஆனது. அதற்கு ஒத்துழைத்த தயாரிப்பாளருக்கு நன்றி. வெற்றி வெகு அற்புதமாகக் காட்சிகளைப் படம்பிடித்துள்ளார். சினேகன் எப்போதும் கலக்கிவிடுவார். நான் சூப்பர் சிங்கரை வைத்துத் தான் பாட வைத்துள்ளேன். அப்படியே நானும் யூத்தாக மாறிக்கொள்கிறேன். எல்லோரும் நன்றாக நடித்துள்ளார்கள் மகிழ்ச்சி. 
படத்தில் காட்சி இருந்தால் தான் மியூசிக் நன்றாக வரும். எல்லோரும் இஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டுள்ளனர். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் நன்றி. 
 
இயக்குநர் சிவம் பேசியதாவது…...
 
வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல தரமான படத்தை, அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தயவு செய்து உதவி செய்ய முன் வாருங்கள் - நடிகர் பிரசாந்த் வேண்டுகோள்