சின்னத்திரை வரலாற்றில் ஏற்கனவே இரண்டு தொடர்கள் இணைக்கப்பட்டு காட்சிகள் அமைப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால், முதல்முறையாக மூன்று தொடர்கள் ஒரே நேரத்தில் இணைக்கப்பட்டு புதிய காட்சிகள் உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்', 'அன்னம்', 'மருமகள்' ஆகிய மூன்று தொடர்களின் காட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, வரும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஒளிபரப்பாகவுள்ளன. இந்த மூன்று தொடர்களின் ஒருங்கிணைந்த காட்சிகளைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரிக்கும் நோக்கிலும், ஒரு தொடரின் ரசிகர்களை மற்ற தொடர்களையும் பார்க்க வைக்கும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. "திரிவேணி சங்கமம்" என்ற பெயரில் ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ள இந்த எபிசோடுகள், சின்னத்திரை வரலாற்றில் ஒரு புதிய முயற்சி என்று கூறப்படுகிறது.
இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தால், எதிர்காலத்தில் மற்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் இது போன்ற " திரிவேணி சங்கமங்கள்" உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.