சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இதில் ஏற்கனவே இரண்டு அணிகள் போட்டியிடும் நிலையில், மூன்றாவது அணியாக பிக் பாஸ் தினேஷ் தலைமையில் ஒரு அணி போட்டியிட போவதாகக் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2000 உறுப்பினர்களை கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத்தில், தற்போது தலைவராக சிவன் சீனிவாசன் மற்றும் செயலாளராக போஸ் வெங்கட் உள்ளனர். இந்த நிலையில், தற்போதைய நிர்வாகத்தினரின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, ஆகஸ்ட் 10ஆம் தேதி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில், தற்போதைய நிர்வாகத்தில் இருக்கும் சிவன் சீனிவாசன் - போஸ் வெங்கட் தலைமையில் ஒரு அணியும், பரத் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், இந்த இரு அணிகள் தவிர, மூன்றாவது அணியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தினேஷ் ஒரு அணியாக போட்டியிடுவதாக கூறப்படுகிறது. ஆனால், தினேஷை போட்டியிலிருந்து நீக்க சிவன் சீனிவாசன் அணி திட்டமிட்டு வருவதாகவும், அப்படி ஏதாவது நடந்தால் தினேஷ் நீதிமன்றம் செல்லவும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சங்கத் தேர்தல் போலவே, சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலும் இந்த முறை பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.