தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து சில கோரிக்கைகளை வலியுறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்களை தி.மு.க. எம்.பி.க்கள் இன்று சந்தித்து பேசினர். அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக இந்த சந்திப்பு நடந்தது. தி.மு.க.வின் எம்.பி.க்களான இளங்கோ, டி.எம். செல்வகணபதி, தங்க தமிழ்செல்வன், முரசொலி , ராஜேஷ்குமார் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, "தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும் போது, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை ஆவணமாக பெற வேண்டும் என்றும், தேர்தல் தொடர்பான அனைத்து விதிமுறைகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது என்றும், தமிழிலும் இடம் பெற வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.