அமரன் படத்தின் இமாலய வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகின்றன. படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்காகப் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் முருகதாஸ் ஈடுபட்டு வருகிறார்.
படத்தின் முன்பதிவு தொடங்கியும் பெரியளவில் ரசிகர்களிடம் ஆர்வம் இல்லாததால் முன்பதிவு மந்தமாகதான் உள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் நடந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது படக்குழு. அப்போது பேசிய சிவகார்த்திகேயன் தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.
அதில் “தெலுங்கு சினிமாவில் பாகுபலி, ஆர் ஆர் ஆர் மற்றும் புஷ்பா போன்ற படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் செய்கின்றன. அதற்குக் காரணம் தயாரிப்பாளர்கள் ஒரு கதையை நம்பிவிட்டால் கணக்குப் பார்க்காமல் செலவு செய்வார்கள். நம்பிக்கையோடு அந்த படத்தைத் தயாரிப்பார்கள். தெலுங்கு படங்களின் இமாலய வெற்றிக்கு தயாரிப்பாளர்கள்தான் காரணம்” எனக் கூறியுள்ளார்.