தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது சம்மந்தமாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார். சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார் என உடற்கூறு ஆய்வில் வெளியானது. இந்த வழக்கில் பலருக்கு தொடர்பிருப்பதாக பல செய்திகள் வெளியாகின. ஆனால் இன்றளவும் ஒரு மர்ம மரணமாகவே சித்ராவின் தற்கொலை உள்ளது.
இந்நிலையில் தற்போது சித்ராவின் தந்தை காமராஜ் திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜ் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சித்ராவின் துப்பட்டாவில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது உடலைக் கைப்பற்றி தற்போது போலீஸார் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.