நடிகர் சந்தானம் நடித்த 'DD நெக்ஸ்ட் லெவல்' என்ற திரைப்படம் நாளை (மே 16) வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற 'கோவிந்தா' என்ற பாடல் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த பாடலில் திருப்பதி வெங்கடாசலபதியினை பக்தர்கள் பக்தியோடு அழைக்கும் கோவிந்தா என்ற வார்த்தையோடுக் கொண்டு ஒரு நகைச்சுவையான பாடலாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்த பாடல் கிட்டதட்ட 80 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு இருந்தது.
ஆனால் இந்த பாடல் திருப்பதி பெருமாளைக் கேலி செய்யும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், பாஜக நிர்வாகி ஒருவர் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் 'DD நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம்பெற்ற 'கோவிந்தா' என்ற பாடலை நீக்க வேண்டும் என்றும், இந்து மதத்தை அவமதித்ததற்காக ரூ.100 கோடி மானநஷ்டஈடு கொடுக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதற்கு விளக்கமளித்த சந்தானம் நானே பெருமாள் பக்தன்தான். என் படத்தில் பெருமாளின் பெயர் இருந்தால் வெற்றி பெறும் என்ற செண்ட்டிமெண்ட்டில் வைத்தோம்” எனக் கூறியிருந்தார். இதையடுத்து அந்த பாடலை தற்போது படக்குழு படத்தில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.