நடிகர் சந்தானம் நடித்த 'DD நெக்ஸ்ட் லெவல்' என்ற திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற 'கோவிந்தா' என்ற பாடல் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், பாஜக நிர்வாகி ஒருவர் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'DD நெக்ஸ்ட் லெவல்' படத்தில் இடம்பெற்ற 'கோவிந்தா' என்ற பாடலை நீக்க வேண்டும் என்றும், இந்து மதத்தை அவமதித்ததற்காக ரூ.100 கோடி மானநஷ்டஈடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கும், பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி அனுப்பியுள்ளார். இதனால், திரைப்படத்தையும் சந்தானத்தையும் சுற்றியுள்ள சர்ச்சை மேலும் தீவிரமானதாகி உள்ளது.
ஏற்கனவே நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இதே கேள்வி சந்தானத்திடம் கேட்கப்பட்டபோது, "நான் கடவுள் பக்தி உள்ளவன். கடவுளை அவமதிக்கும் வகையில் எந்த காட்சியையும் என்னுடைய படத்தில் வைக்க மாட்டேன்" என்று அவர் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.