அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா, ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து இந்திய சினிமாவின் கவனிக்கப்படும் இயக்குனராக அவர் மாறியுள்ளார். தற்போது அவர் பிரபாஸை வைத்து ஸ்பிரிட் படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் ஆனார். ஆனால் தற்போது ஸ்பிரிட் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் சந்தீப்புடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாகவே தீபிகா வெளியேறியதாக சொல்லப்படுகிறது. அவருக்குப் பதில் திரிப்தி டிம்ரி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் சந்தீப் ரெட்டியின் ட்வீட் ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அதில் “நான் ஒரு கதையை உங்களிடம் சொல்கிறேன் என்றால் 100 சதவீதம் உங்களை நம்புகிறேன். அதனால் அதை வெளியில் பகிரக்கூடாது என்பது எழுதப்படாத விதி. ஒரு இளம் நடிகரை அசிங்கப்படுத்துவது மற்றும் என் கதையில் மாற்றங்கள் செய்வது? இதுதான் உங்கள் பெண்ணியமா? ஒரு இயக்குனராக என் படைப்புகளுக்குப் பின்னால் நான் வருடக் கணக்கில் உழைப்பைப் போடுகிறேன். எனக்கு எல்லாமே சினிமாதான். உங்களுக்கு அது புரியவில்லை. எப்போதும் புரியவும் புரியாது.” என ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவில் அவர் தீபிகா படுகோன் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவரை சாடிதான் பதிவிட்டுள்ளதாக கருத்துகள் எழுந்துள்ளன.