ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மல்யுத்த பிரிவில் வினேஷ் போகத் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இருந்த நிலையில் திடீரென அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ஒலிம்பிக் கமிட்டிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல அரசியல்வாதிகளும் சில திரை உலகை சேர்ந்தவர்களும் தங்களது சமூக வலைதளங்களில் இது குறித்து தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை சமந்தா இது குறித்து தனது சமூக வலைதளத்தில் சில நேரங்களில் மிகவும் கடினமான தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும். நீங்கள் தனியாக இல்லை என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு உயர்ந்த சக்தி உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறது, சிரமங்களுக்கு மத்தியிலும் நிலைத்து நிற்கும் உங்கள் அசாத்திய திறமை உண்மையில் போற்றத்தக்கது. உங்கள் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று பதிவு செய்துள்ளார்.
அதேபோல் நடிகை பார்வதி நாயர் தனது சமூக வலைத்தளத்தில் வெறும் 100 கிராம் எடை அதிகம் என்பதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் மனம் முற்றிலும் உடைந்து விட்டது. இது அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரிடியாகும். இந்த கடினமான நேரத்தில் உங்களுக்கு நாங்கள் அனைவரும் ஆறுதலாக இருப்போம், உறுதியாக இருங்கள் வினேஷ் போகத் என்று பதிவு செய்துள்ளார்.