80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். ஆனால் அவரின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்ற வேகத்திலேயே கீழே இறங்கியது. ஆனாலும் அவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக இருந்தார்.
கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த மேதை படத்துக்குப் பிறகு தற்போது சாமான்யன் படத்தில் நடித்து அந்த படம் மே 23 ஆம் தேதி ரிலீஸானது. படத்துக்கு ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனாலும் படம், ரசிகர்களை திரையரங்கம் நோக்கி இழுக்கவில்லை. இதுவரை படம் தமிழ்நாடு முழுவதும் 15 லட்ச ரூபாய் வசூலைக் கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால் இந்த பட தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. அதனால் இனிமேல் தனக்கு ஹீரோ என்ற சுமை வேண்டாம் என ராமராஜன் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இனிமேல் நல்ல படங்களில் குணச்சித்திர வேடங்கள் வந்தால் நடிக்க தயாராகி வருகிறாராம் ராமராஜன்.