முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. காமெடி திரைப்படங்களை வைத்தும் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட முடியும் என நிரூபித்தவர் சுந்தர் சி.
முறைமாமன் திரைப்படத்திற்கு பிறகு அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி இரண்டுமே யாருமே எதிர்பார்க்காத வெற்றியை கொடுத்தன. காமெடி திரைப்படங்களுக்கு நடுவே கொஞ்சம் சீரியஸான திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார் சுந்தர் சி.
இதற்கு நடுவே தலைநகரம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாகவும் அறிமுகமானார். அந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துக்கொண்டுள்ளார். அதில் சுந்தர் சி கூறும்போது, “ஒரு நடிகராக நான் தோல்வியடைந்த நடிகர் என்றுதான் கூறவேண்டும். என்னுடைய முதல் மூன்று படங்கள் தலைநகரம், வீராப்பு, சண்டை மூன்றுமே ஹீரோவாக எனக்கு வெற்றியை கொடுத்த படங்கள்.
அதற்கு பிறகு எனக்கு எக்கச்சக்கமான பட வாய்ப்புகள் வந்தன. அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனவே வாய்ப்பு கிடைக்கும் படத்தில் எல்லாம் கமிட் ஆனேன். அதனை தொடர்ந்து வரிசையாக ஒரு எட்டு படம் என் நடிப்பில் வெளியாகி தோல்வியை கண்டது.
அதற்கு பிறகு இனிமேல் நடிக்கவே வேண்டாம் என முடிவு செய்தேன். அது மட்டுமின்றி இயக்குனராய் இருப்பதுதான் எனக்கு எளிதாக இருந்தது. நடிப்பது என்பது எனக்கு சோர்வை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தது. எனவே மீண்டும் இயக்குனராகி நான் இயக்கிய திரைப்படம்தான் கலகலப்பு.
உண்மையில் என்றைக்குமே என்னை ஒரு ஹீரோவாக நான் நினைத்ததில்லை. ஒரு நடிகராக நான் தோல்வியடைந்த நடிகர்தான்” என வெளிப்படையாகவே பேசியுள்ளார் சுந்தர் சி.