புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசியது பிரதமர் மோடிக்கே கேட்டுள்ளது என்று நேற்று 'காப்பான்' இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கூறினார்
சமீபத்தில் நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் சூர்யாவின் பேச்சுக்கு ஒருபுறம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்க, இன்னொருபுறம் கமலஹாசன், சீமான், டிடிவி தினகரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல் பா.ரஞ்சித், அமீர், சத்யராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் சூர்யாவின் கருத்தை ஆமோதித்தனர்
இந்த நிலையில் நேற்று சூர்யா நடித்த 'காப்பான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், 'புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்தை தான் ஆமோதிப்பதாகவும், புதிய கல்வி கொள்கை குறித்து தான் பேசி இருந்தால் பிரதமர் மோடிக்கு கேட்டு இருக்கும் என சிலர் கூறுவதாகவும், ஆனால் சூர்யா பேசியதே பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் கேவி ஆனந்த் அவர்களுடன் ஏற்கனவே ஒரு படம் நடிக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அந்த வாய்ப்பைத் தவற விட்டு விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்த ரஜினிகாந்த், வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தகத்தைப் படித்ததாகவும், அந்த புத்தகத்தை படித்தவுடன் அவர் மீது மதிப்பு அதிகமானதாகவும் ரஜினிகாந்த் கூறினார்.