ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.
இந்நிலையில் சமீபத்தில் மகேஷ் பாபுவின் பாஸ்போர்ட்டை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை ராஜமௌலி வெளியிட அது வைரல் ஆனது. அந்த புகைப்படத்தின் கீழ் கமெண்ட் செய்து படத்தில் தானும் இருப்பதை பிரியங்கா சோப்ரா உறுதி செய்துள்ளார். சமீபகாலமாக பிரியங்கா சோப்ரா இந்திய படங்கள் எதிலும் நடிக்காமல் ஹாலிவுட் சீரிஸ்கள் மற்றும் படங்களில் கவனம் செலுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு 30 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை இந்தியாவைச் சேர்ந்த எந்த கதாநாயகியும் இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.