Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேரறிவாளன் விடுதலை வழக்கு: இறுதி கட்டத்தை எட்டியுள்ளதா ?

Advertiesment
பேரறிவாளன் விடுதலை வழக்கு: இறுதி கட்டத்தை எட்டியுள்ளதா ?
, வியாழன், 5 மே 2022 (07:39 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
 
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
 
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
கடந்த , 2014ஆம் ஆண்டு, இந்த ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு அறிவித்து, மத்திய அரசின் கருத்தைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் தாங்கள்தான் முடிவெடுக்க முடியுமென மத்திய அரசு தெரிவித்தது.
 
இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு, தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "யார் விடுதலை செய்ய வேண்டும் என்ற குழப்பத்திற்கிடையில் ஏன் அவர் (பேரறிவாளன்) சிக்கிக்கொள்ள வேண்டும்? நாங்களே (உச்ச நீதிமன்றம்) ஏன் விடுதலை செய்யக்கூடாது?" என கேள்வி எழுப்பினர்.
 
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்ராஜ், "அமைச்சரவையின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்" என தெரிவித்தார்.
 
இதையடுத்து நீதிபதிகள்,"ஆளுநர் இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்காக, எத்தனை முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது? அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார் என்றால், இது அரசியலமைப்பின் கூட்டாட்சித் தன்மையை சிதைத்துவிடும்" என்றனர்.
 
பின்னர் வழக்கு விசாரணையை மே 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஒருவார காலத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்து தெளிவான முடிவை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே வேளை, இவ்விவகாரத்தில் யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்தும் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், நேற்று (மே 4ம் தேதி), விசாரணையில் அரசு வழக்குரைஞரிடம் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக, ''விடுதலை செய்யும் அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்,'' என்றனர்.
 
நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகள்
webdunia
ஆளுநர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொல்லி வருகிறார் என்று பேரறிவாளன் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன்தெரிவித்தார். இதற்கு, மத்திய அரசு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
 
இதையடுத்து நீதிபதிகள், ''30 வருடங்கள் முடிந்து விட்டன. பேரறிவாளன் நன்நடத்தையில் பிரச்னை இல்லை. படிப்பையும் முடித்துள்ளார். அவரை விடுதலை செய்வதில் என்ன பிரச்னை உள்ளது? நீங்கள் முடிவெடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் விடுதலை செய்யும் என ஏற்கனவே தெரிவித்துள்ளோம். ஒருவர் மீது மட்டும் பாரபட்சம்காட்ட கூடாது,'' என்றனர்.
 
தொடர்ந்தும் 'குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ, என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல்சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. அரசியலைப்பு, சட்டத்திற்கு மேல் ஒருவரும் கிடையாது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது. ஆனால் இந்த வழக்கில் அரசியல்சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும்,'' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
மீண்டும் ஒத்தி வைப்பு ஏன்?
 
இதைத்தொடர்ந்து, "பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பது தொடர்பாக குடியரசுத் தலைவர் முடிவெடுக்க உள்ளார்," என்று மத்திய அரசு வழக்குரைஞர் நட்ராஜ் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, "அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஒரு முடிவை எடுத்து, அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இது அரசியல்சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது. இதை மத்திய அரசு ஏன் ஆதரிக்கிறது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, வழக்கின் விசாரணையை ஒரு வார காலத்திற்கு (வரும் செவ்வாய் கிழமை )ஒத்தி வைத்தனர்.
 
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசுக்கு ஏற்கனவே ஒரு வாரம் அவகாசம் அளித்தனர். இப்போது மீண்டும் ஒருவார காலத்துக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளனர். நீதிபதிகளின் கருத்துகளை வைத்து பார்க்கும் போது, பேரறிவாளன் விடுதலை வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக மூத்த வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இறுதி கட்டத்தை எட்டியுள்ள வழக்கு
 
பேரறிவாளன் தரப்பு வழக்குரைஞர் பிரபு பிபிசி தமிழிடம் கூறுகையில், "மத்திய அரசு தரப்பில் மீண்டும் பழைய வாதத்தை முன்வைத்தனர். ஆனால், தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவிற்கு எதிராக இருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாக உள்ளது.
 
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்க வேண்டியுள்ளது. எனவே தமிழ்நாடு ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட முடிவு குறித்த விபரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டனர்,'' என்றார்.
 
மேலும், இது குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதை குறிப்பிட்டு, குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும் வரை நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று மத்திய அரசு வழக்குரைஞர் தெரிவித்தார். ஆனால், இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதில், குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
''மத்திய அரசு பதிலில் நீதிபதிகள் திருப்தியடையவில்லை. மத்திய அரசுக்கு கொடுத்த வாய்ப்புகள் முடிந்து விட்டன. இப்போது நாங்கள் முடிவெடுக்கும் நிலைக்கு வந்துள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ''
 
''ஆகையால், அமைச்சரவை முடிவில் ஆளுநர் தலையீடு செய்யக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் எந்த அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே, இந்த வழக்கு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு சட்டப்படி வாய்ப்புகள் அதிகம் உள்ளது,''என்றார் வழக்குரைஞர் பிரபு.
 
சுமார் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு, கடந்த மார்ச் 9ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பிணையில் வெளியாகி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமல் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!